×

கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை எடப்பாடிக்கு எதிராக ஓபிஎஸ் திடீர் போராட்டம்: ஆகஸ்ட் 1ம் தேதி நடக்கும் என அறிவிப்பு

சென்னை: கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை மற்றும் மர்ம மரணங்களுக்கு காரணமானவர்கள், மூளையாக செயல்பட்டவர்களை கண்டறிந்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 1ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

ஜெயலலிதா மிகவும் நேசித்த வசிப்பிடமாக இருந்து வந்தது கொடநாடு பண்ணை பங்களா. அப்படி அவர் நேசித்து பிரவேசம் செய்த நிகரில்லா திருவிடத்தை ஒன்றரை கோடி தொண்டர்களும் ஜெயலலிதா குடியிருந்த கோயிலென கும்பிட்டு வந்த நிலையில், அவரது மறைவிற்கு பிறகு 2017, ஏப்ரல் 24ம் நாளன்று இரக்கமற்ற ஓர் அரக்கர் கூட்டம், அந்த கொடநாடு தோட்டத்திற்குள் புகுந்து அங்கே காவல் காத்து வந்த ஓம்பகதூர் என்கிற காவலாளியை கொலை செய்து, கிருஷ்ணபகதூர் என்னும் காவலாளியை கொடுங்காயப்படுத்தி, கொலை, கொள்ளையை நிகழ்த்திய சம்பவம் நடந்தது.

இதன் தொடர்ச்சியாக இந்த சம்பவத்தை திட்டமிட்டு அரங்கேற்றியதாக சந்தேகிக்கப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் மற்றும் கொடநாடு பங்களாவில் சி.சி.டி.வி. மற்றும் கணினி உள்ளிட்ட பொறுப்புகளை நிர்வகித்து வந்த தினேஷ் என்கிற இளைஞர், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களை ஏற்பாடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட சயான் என்பவரது மனைவி, மகள், மேலும் இந்த குற்றம் நிகழ்ந்த காலத்தில் கொடநாடு சரக காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்தவர் உள்ளிட்ட பலரது சந்தேக மரணங்கள்,

மர்ம விபத்துகள் தொடர்ச்சியாக நடைபெற்று, மொத்தமாக 6 உயிர்கள் பறிபோய்விட்ட நிலையில், இந்த கொடூரங்கள் நடைபெற்று ஏறத்தாழ 6 ஆண்டுகள் ஆகிவிட்டபோதும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படவும் இல்லை, இந்த குற்றத்திற்கான நோக்கம், இந்த பாவக் காரியத்தை பின்னிருந்து இயக்கியவர்கள் யார் என்பதையெல்லாம் கண்டறிவதற்கும், அவர்களை கடுமையாக தண்டிப்பதற்கும் முறையான நடவடிக்கைகள் இதுவரை உறுதியோடு மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டதாகவே கருதப்படுகிறது.

விசாரணை மாடங்களும், விசாரிக்கப்படும் அமைப்புகளும் மாறுகிறதே தவிர இந்த வழக்கின் சூத்திரதாரி யார் என்பதும், இந்த குற்றத்தை முன்னின்று நடத்திய கொடூரன் யார் என்கிற முடிச்சும் இன்றுவரை அவிழ்க்கப்படவில்லை. இந்த சம்பவத்தில் தொடர்புடைய பல உயிர்கள் பறிபோன நிலையிலும், அந்த கொடூர நிகழ்வில் உயிரோடு தப்பித்து நேபாளத்திற்கு சென்ற கிருஷ்ணபகதூர் என்கிற காவலாளியை இன்று வரை அழைத்து வந்து, அவர் கண்ணால் கண்ட அச்சம்பவம் குறித்து அவரிடம் விசாரணை ஏதும் காவல் துறையால் நடத்தப்படாமல் இருப்பது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளிக்கிறது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கினை விரைந்து விசாரித்து, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இதனை ஆளும் திமுக அரசின் கவனத்திற்கு கொண்டு வருவது அனைவரின் கடமையாகும். ஜெயலலிதா மரணம் அடைந்து ஆறு மாதத்திற்குள்ளேயே அவர் வசித்த பங்களாவிற்குள்ளேயே கொலையையும், கொள்ளையையும் நடத்தியவர்கள் சட்டம்-ஒழுங்குக்கும், தமிழக காவல் துறையின் மாண்புக்கும் சவால் விடுத்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, உள்வாங்கிக் கொண்டு,

ஆளும் திமுக அரசு இந்த வழக்கினை விரைந்து விசாரித்து குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அதிமுக சார்பில் மாநிலம் தழுவிய அளவில், அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் ஆகஸ்ட் 1ம் தேதி காலை 10.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். கொடநாடு கொலை விவகாரத்தை கையில் எடுப்பது மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடியை கொடுக்கலாம் என்று ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டு செயல்பட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை எடப்பாடிக்கு எதிராக ஓபிஎஸ் திடீர் போராட்டம்: ஆகஸ்ட் 1ம் தேதி நடக்கும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : OPS ,Kodanadu bungalow ,Chennai ,
× RELATED யானைகள் வழித்தட வரைவு அறிக்கையை...